நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் மழையுடனான காலநிலை தொடர்ந்தும் நீடிக்குமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தொடர்பாக தெரிவித்துள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு அம்பாந்தோட்டை மாவட்டத்தில் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக அத்திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறும் பொதுமக்களுக்கு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Comments
Post a Comment