Skip to main content

தமிழரின் பண்டைய சத்திரசிகிச்சை முறைகள்.


சித்த மருத்துவராகிய எனது பெயரின் பின்னால் இருக்கும் (B.S.M.S) என்று பட்டத்தின் விரிவாக்கம் எத்தனை பேருக்குத் தெரியுமோ? (Bachelor of Siddha Medicine and Surgery) அதாவது சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சைக்கான பட்டம். அப்படியானால் சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?
இதற்கான பதிலை கடைசியில் கூறுகிறேன்.

அதற்கு முன் சில விசயங்களைப் பார்ப்போம். அறுவை சிகிச்சை என்றாலே அதற்கு நேர்த்தியான கருவிகள் வேண்டும்.

சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை செய்ய பயன்படும் கருவிகளின் பெயர்களையும், அதன் வடிவங்களையும் சுருக்கமாகப் பார்ப்போமா?

‘அகத்தியர் நயன விதி’ என்ற புத்தகத்தில் மட்டும் கூறப்பட்ட 26 வகையான கருவிகளை ஒரு அறிமுகத்திற்காக குறிப்பிடுகிறேன்.

கத்தி சத்திரம் கவின்குறும்பி வாங்கியும்

முக்கவா தன்னுடன் முள்ளு வாங்கியும்

ஆழிக் கோலு மடுத்த பிறையுடன்

கத்திரிக் கையுடன் பரகரை வாங்கியும்

முச்சலா கையோடு முனிமொழி யோட்டும்

மட்டக் கோலும் மாறும் ஊசியும்

செப்புக் கிழையுஞ் சீரிய சலாகையும்

வட்டகை தன்னுடன் வளர்பஞ் சமுகமும்

செப்புச் சலாகையுங் கொம்புங் குடோரியும்

வெங்கலக் குழலும் ஈயச் சலாகையுங்

காயக் கோலுங் கண்கத்தி தண்டும்

இவையிவை யாயுத மிருபத் தாறும்

இதன் அளவுகளையும்,வடிவங்களையும் சுருக்கமாக பார்ப்போமா..

சுத்தி – 6 அங்குல நீளம்,அகலம் 1 அங்குலம்,முனைவட்டம் மயிர்க்கத்தியைப் போன்றது.

சத்திரம் – 6 அங்குல நீளம்,வேப்பிலையைப் போல் பல்பல்லாயிருக்கும். நிறை 6 கழஞ்சு, பிளவை, கட்டியிவைகளைக் கண்டமாய் அறுக்க உபயோக்கபடுகிறது.

குறும்பி வாங்கி – 7 அங்குலம், நிறை அரைக்கழஞ்சு, கைப்பிடி மட்டும் 5 அங்குலம்.

முகவாதனன் – 12 அங்குலம், நிறை முக்காற் கழஞ்சு

முள்வாங்கி – 6 அங்குலம் நீளமுள்ளதாய் 1 அங்குலம் அகலமுள்ளதாய் 1 கழஞ்சு நிறையுள்ளதாயிருப்பது. இது அறுக்கவும், கீறவும், நகம் வாங்கவும் உபயோகப்படுவது.

ஆழிக்கோல் – 10 அங்குலம், நிறை அரைப்பலம்.

பிறைக்கோல் – 3 அங்குலம், நிறை 3 கழஞ்சு எழுத்தாணிபோல் நீண்ட பிறைக்கோல் மத்தியில் விளங்கும்.

கத்தரிக்கோல் – 8 ½ அங்குலம், நிறை கால் பலம்

பரகூரை வாங்கி – 16 அங்குலம், நிறை அரைப்பலம்.

முச்சிலாகை – 7 அங்குலம், நிறை 4 கழஞ்சு, மூன்று தகட்டு வாயுள்ளது.

முனிமொழி – இது ஒரு முக்கிய கருவியாகும்.

ஒட்டுக்கோல் – 11 அங்குலம் தலை மட்டம், 1 கழஞ்சு, தலையொழிந்த பாகம் அரைப்பலம் நிறையுள்ளது.

அட்டக்கோல் – 18 அங்குலம் நிறை 8 காசெடை

ஊசி – 3 அங்குலம், நிறை அரைமா.

செப்புக் குழை – ஒரு சாண் நீளம், நிறை அரைப்பலம், தகடு ஓலைக்கனம், திரட்சியான குழல், புண்ணில் விடுவது.

சுலாகை – 4 அல்லது 5 அங்குலம், நிறை 12 கழஞ்சு, புரையோடிய புண்களின் நிலையை யறிதற்கு உபயோகப்படுவது.

வட்டகை – ஓர் ஆயுதம்

பஞ்சமுகம் – ஓர் ஆயுதம்

செப்புச் சிலாகை – ஓர் ஆயுதம்

கொம்பு – 10 அங்குலம் நீளம்,காளை மாட்டுக் கொம்பிற்கு அடிப்பாகத்தில் பித்தளையினால் ஆன பூண் போன்றது. அதாவது வாழையின் குருத்துபோன்ற பூண் இரண்டங்குலம். குருதி கட்டப்பட்டிருக்கும் சரீர வீக்கம், கட்டி இவைகளைக் கீறி இரத்தத்தைக் கொம்பு வைத்து வாயினால் உறிஞ்சி உமிழ்தல்.

குடோரி – 7 ½ அங்குலம், நிறை கால் பலம்.

வெண்கலக் குழல் – 8 அங்குல நீளம், நிறைய — பலம்.

ஈயச்சலாகை – 3 அங்குல நீளம், நிறை 4 கழஞ்சு, வாதம், பிளவை, கிருமி இவற்றைக் குணப்படுத்துவது.

காயக்கோல் – 7 அங்குல நீளம், பருமன் 2 அங்குலம், நிறை 2 கழஞ்சு

தண்டுச் சலாகை – 9 அங்குலம், நிறை 1 ½ கழஞ்சு, ஈர்க்குக் கனம்.

நயனக் கத்தி – 3 அங்குலம், நிறை இரு பணவெடை, ஊசி போன்ற முனையுள்ளது. (முனையில் புளியிலை கனம் விட்டு மற்ற பாகங்களெல்லாம் நூலால் சுற்றப்பட்டுள்ளது.)

இங்கு இன்னொரு முக்கியமான விசயத்தை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன், இந்த கருவிகளையெல்லாம் நான் பார்த்தது கூட கிடையாது.

சரி இனி அடுத்த விசயத்திற்கு வருவோம்.

சித்த மருத்துவத்தில் மூன்று வகையான மருத்துவமுறைகள் உள்ளன.

1) மூலிகைகள், தாதுப்பொருள்கள், உயிரினங்களிலிருந்து கிடைக்கும் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் சாதாரணமான மருந்துகளால் சிகிச்சை செய்வது.

2) சில உயர்தர மருந்துகளைக் கொண்டு சிகிச்சை செய்வது (Higher Level Medicines)

3) அறுவை சிகிச்சை

இதில் அறுவை சிகிச்சையை அசுர சிகிச்சை என்ற பெயரில் செய்திருக்கின்றனர்.

அதாவது மருந்துகளால் குணப்படுத்த முடியாத சில நோய் நிலைகளை, அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்தியுள்ளனர். ஒட்டுமொத்த நோய்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நோய்களின் எண்ணிக்கை மிகவும் சொற்பமே.

சரி, சித்த மருத்துவத்தில் எப்படி அறுவை சிகிச்சை செய்திருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு வரலாம்.

1) அறுவை

2) அக்கினி

3) காரம்

என்ற மூன்று முறைகளை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தனர். இந்த மூன்று முறைகளும் ஒரு அறுவை சிகிச்சையில் எப்படி பயன்படுத்தப்பட்டன என பார்ப்போம். முதலில் அறுவை, இதற்குத்தான் மேற்கூறிய கருவிகளை பயன்படுத்தினர்.

அறுவை சிகிச்சை செய்வதில் சிக்கலான விசயங்கள் மூன்று.

அறுக்கும் போது ஏற்படும் வலி(pain)

இரத்தப்போக்கு ((Bleeding)

கிருமி தொற்று (Infection)

இந்த மூன்றையும் கையாண்டுவிட்டால் அறுவை சிகிச்சை செய்து விடலாம்.

வலி:

இன்றைக்கு மயக்க மருந்து கொடுப்பதைப் போலவே நோயாளியை மயக்கமடையச் செய்ய அநேக மருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஊமத்தை விதை, கஞ்சா, அபினி போன்றவைகள் உதாரணத்திற்கு. இன்றைக்கும் நவீன மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் மிக வலிமையான வலி நிவாரணியான Morphine அபினி எனும் மூலிகையிலிருந்து தான் உருவாக்கப்பட்டது.

இரத்தப்போக்கு:

இதனை தடுப்பதற்காகத்தான் அக்கினி என்ற முறையை பயன்படுத்தினர். அதாவது அறுவை சிகிச்சை செய்த இடத்தில் இரத்தக்குழாய்களில் மேற்கூறிய கருவிகளை சூடாக்கி சுட்டிகை செய்து விடுவது (Cauterization) இன்றைக்கும் நவீன அறுவை சிகிச்சையில் இந்த உத்திகள் பல விதங்களில் பயன்படுத்தப்படுகிறது.

கிருமி தொற்று:

அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கிருமிகள் தொற்று ஏற்பட்டால் அதிகபட்சமாக உயிரிழப்பு கூட ஏற்படலாம். எனவே அறுவை சிகிச்சை செய்த இடத்தில் கார மருந்துகளை வைக்கும் முறை இருந்தது. செய்யும் அறுவை சிகிச்சையைப் பொறுத்து காரமாகவோ, களிம்பாகவோ, பொடியாகவோ, நீர் வடிவிலோ, களி வடிவத்திலோ அல்லது பசை வடிவத்திலோ கார மருந்துகள் வைக்கப்பட்டன.

அறுவை சிகிச்சை முறைகளை விளக்கும் சில நூல்கள்:

தேரன் கரிசல்

தேரன் தரு

அகத்தியர் இரண வைத்தியம்

நாகமுனி நயன வைத்தியம்

சீவரட்சாமிர்தம்

யூகி சிந்தாமணி

என்னென்ன நோய்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்ற விபரங்களும், யார் யாருக்கெல்லாம் அறுவை சிகிச்சை செய்தால் உடல்நிலை ஒத்துக்கொள்ளாது என்ற குறிப்புகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.

மிக மிக சுருக்கமாக ஒரு அறிமுகத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறேன்.

சரி இப்போது மீண்டும் கேள்விக்கு வருவோம். சித்த மருத்துவத்தில் அறுவை சிகிச்சை உள்ளதா?

மருத்துவத்தில் உள்ளது, மருத்துவமனையில் இல்லை.

ஆக்கம்: மனோராஜ் ராஜ்மோகன் (வைத்தியர்)

Comments

Popular posts from this blog

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது.

எனது அழுகை இதுவரை யாருக்குமே வெளியே தெரியாது. பின் இரவுகளில் எழுந்து என்னோடு நான் பேசுகின்றேனா... என்னோடு நான் அழுகின்றேனா... இரண்டுமே ஒரே மொழியாகவேதான் இருக்கின்றது. சாளரங்களை பூட்டியும் கதவினை சாத்தியும் உரிமையோடு அழுகின்றேன். கதவு தட்டப்படும் போதெல்லாம் கன்னம் துடைத்தே வெளிவருகின்றேன். என் அழுகைக்கான காரணத்தை அழுகையின் முடிவு கூட உணர்த்தியதில்லை... இந்தப்பருவம் எனது அழுகைக்கான பருவமோ...நான் எந்த பருவத்தில் இருந்து அழுது கொண்டிருக்கின்றேனோ எனக்கே தெரியாது. அழுகையின் தொடக்கமும் முடிவும் அழுகையாகவே மட்டும் இருக்கிறது. கிடைக்கும் தனிமைகளை எல்லாம் அழுகைக்காகவே பயன்படுத்தி கொள்கின்றேன். அழுகையின் பாதியில் குறுக்கீடுகள் எற்ப்படின் மீதி அழுகைக்காக வேறு இடம் தேடுகின்றேன். அழாத நாட்கள் என்று ஒன்றமே என்னை கடந்ததாக இல்லை... அழுகையை விட ஒரு நண்பன் இதுவரை என்னோடு கூட இருந்ததாகவும் இல்லை... அழுவதற்கென்று குளியல் அறையினையே நான் அதிகம் பயன்படுத்துகின்றேன். யாராவது கதவினை தட்டி உள்ளே வந்தாலும் எனக்கு பயமில்லை... எனது அழுகையினை எனது குளியல் ஒருபோதும் காட்டியே க...

ஷமி ஹாட்ரிக் விக்கெட்டுக்கள்: கடைசி ஓவரில் இந்தியா த்ரில் வெற்றி!

நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் 28வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி ஒரு பந்து மீதமிருக்கையில் த்ரில் வெற்றி பெற்றது. கடைசி ஓவரை வீசிய முகமது ஷமி, முகமது நபி உள்பட மூன்று விக்கெட்டுக்களை எடுத்து ஹாட்ரிக் சாதனை செய்தார். உலகக்கோப்பையில் ஹாட்ரிக் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமையும் ஷமிக்கு கிடைத்துள்ளது ஸ்கோர் விபரம்: இந்தியா: 224/8  50 ஓவரகள் விராத் கோஹ்லி: 67 கேதார் ஜாதவ்: 52 கே.எல்.ராகுல்: 30 விஜய் சங்கர்: 29 தோனி: 28 ஆப்கானிஸ்தான்: 213/10  49.5 ஓவர்கள் முகமது நபி: 52 ரஹ்மத் ஷா: 36 குல்பதின் நப்: 27 ஜாட்ரான்: 21 ஆட்டநாயகன்: பும்ரா இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் நியூசிலந்து அணி மேற்கிந்திய தீவுகள் அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஸ்கோர் விபரம்: நியூசிலாந்து: 291/8  50 ஓவர்கள்

ஏழ்மை கல்விக்கு தடையல்ல - வாழ்வினில் கல்வியினூடாக பல சாதனைகள் செய்திட வாழ்த்துக்கள் சகோதரி!!!

கடந்த வருடம் க.பொ.த சாதரன தர பரீட்சையில் 6 பாடங்களில் அதி உயர் சித்திகளை (6ஏ) பெற்ற #தாண்டியடி விக்ணேஸ்வரா மகா வித்தியாலத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் தமது குடும்ப சூழல் காரணமாக உயர் தர வகுப்புக்களுக்கான கட்டணங்களை செலுத்துவதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார். கல்வியில் திறமையும் ஆர்வமும் உடைய இம்மாணவிக்கு உதவும் முகமாக பொத்துவில் ஊறணியை சேரந்த சேவியர்_குரேரா பிறின்டன்_குரேரா அவர்கள் ரூ 25,000/- ஐ நன்கொடையாக வழங்கி உதவியுள்ளார் (இவர் ஏற்கனவே மர நடுகைக்காக ரூ 5,000/- நன்கொடை வழங்கியிருந்தார் எனபது இங்கு குறிப்பிடத்தக்கது)  வாழ்த்துக்கள் சகோதரா 👏👏👏👏👏 இவருடைய நன்கொடையில் இந்துசமயம்,அரசியல்,தமிழ் ஆகிய பாடங்களுக்கான அடுத்து வரும் 2-3 மாதங்களுக்கான வகுப்பு கட்டணங்களும், நிரந்தர வாழ்வாதார உதவியாக ஒரு கோழிக்கூடு மற்றும் நாட்டுக்கோழிகளும் (10 பேடு, 2 சேவல்) வழங்கப்பட்டன.  இம்மாணவியின் கல்வி அடைவுமட்டங்களை பாடசாலை அதிபர் அவர்களால் நேரடி கண்கானிப்பில் அவதானிக்கபடும் என அதிபர் அவர்களே அக்கறை கொண்டு கூறியது கூடுதல் மகிழ்ச்சி. 👍🏻👌 நன்கொடையாளருக்கும் இதனை சரியாக...